சேலம்: சேலம் கருங்கலுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவரின் செல்போனுக்கு கடந்த மாதம் 10ஆம் தேதி ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி புதிய சிம்கார்டு வாங்கி உள்ளதாகவும், அதனை பயன்படுத்தி ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அந்த மர்ம நபர், ஆதார் எண் மற்றும் தங்களது வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும் எனவும், அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும் படியும் கூறியுள்ளார். அதன்பின்னர் மருத்துவரும், தனது ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், மருத்துவரின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தான் சொல்லும் கணக்கில் செலுத்துமாறும், ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் திரும்ப அனுப்பப்படும் என மருத்துவரிடம் மர்ம நபர் பேசி உள்ளார். இவற்றை நம்பி, அந்த மர்ம நபர் கொடுத்த மூன்று வங்கிக் கணக்குகளுக்கு, அரசு மருத்துவர் பத்து முறையாக 36 லட்சம் ரூபாய் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.