மதுரை:மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து, பெரியார் பேருந்து நிலையத்திற்கு 12V என்ற அரசுப் பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துள்ளது. இதில், பேருந்தின் பல இடங்கள் சேதமடைந்து ஓட்டை உடைசலாக இருந்துள்ளது.
அப்பொழுது, அதில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி திருப்பதி, “பேருந்தின் நடத்துனரிடம், டிப்போவில் இருந்து பேருந்தை எடுக்கும் பொழுது பேருந்தின் நிலையைக் கண்டு பார்த்து எடுக்கவில்லையா? ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள பேருந்தை சரிபார்க்காமல் ஏன் எடுத்து வத்தீர்கள்? சம்பளம் நீங்கள் தானே வாங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தகரம் விழுந்து ஓட்டை ஏற்பட்டு விபரீதம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? இது பயணிகளுக்கு பாதுகாப்பு தானா?” எனக் கூறியுள்ளார். இதனால் கடுப்பான நடத்துநர் அந்த விவசாயியை அவதூறாக பேசியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில், நடத்துநர் விவசாயியை தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்தின் நிலை குறித்து கேட்டதற்கு பயணியை நடத்துநர் தாக்கியுள்ள சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திடீர் நகர் காவல் நிலையத்தில் விவசாயி திருப்பதி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கைவிரல் துண்டாக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது.. கடலூர் மூவர் கொலையில் திடுக்கிடும் பின்னணி! - Cuddalore triple murder