தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக, 21 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில், நான்காவது நடை மேடைக்கு இன்று (பிப்.25) வந்துள்ளது. அப்போது சரக்கு ரயிலில் பொருத்தப்பட்டிருந்த இரு என்ஜின்களில், முன் என்ஜினை பின்னோக்கி இயக்கியபோது, எதிர்பாராத விதமாக முதல் என்ஜினின் மூன்று சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.
இதனை அறிந்த சரக்கு ரயிலின் ஓட்டுநர், ரயிலை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சரக்கு ரயில் தடத்தில் இவ்விபத்து ஏற்பட்டதால், வழக்கமான பயணிகள் ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. தற்போது தடம் புரண்ட ரயில் என்ஜினை தொழில்நுட்ப ஊழியர்கள் உதவியோடு மீட்டு, அதனை சரி செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.