சென்னை:சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு கரன்சிகள், வெளிநாட்டு அரிய வகை வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுகிறது.
அதேபோல், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. மேலும், தாய்லாந்து உட்பட நாடுகளில் இருந்து அரிய வகை வன உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு கரன்சிகள் அதிகமாக கடத்தப்படுகின்றன.
இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தி, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்து வருகின்றனர். இருப்பினும், இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகிறது.
தங்கம் கடத்தல்:இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் மாதம் வரை சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ள தங்கம், போதைப் பொருள்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சுங்கத்துறை அதிகாரிகள், 878 பயணிகளிடம் இருந்து, 344 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.184.70 கோடியாகும். அதேபோல், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 132 பேரிடம் இருந்து (ஓமன் நாட்டில் இருந்து வந்த ஒரே விமானத்தில் 113 பேர்) 96 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.64 கோடியாகும். ஒட்டு மொத்தமாக 440 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இதன் மதிப்பு ரூ.248 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள்கள்:இதனை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனைகளில், 2023-2024 ஆம் ஆண்டில் கொக்கைன், ஹெராயின், மெத்தோபெட்டமின் உள்ளிட்ட 42.68 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.192 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.