கோயம்புத்தூர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், வேட்பு மனுத் தாக்கலின் இறுதி நாளான இன்று, கோவையில் பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், தனது பிரச்சாரத்தை துவக்கினார். பின்னர், அங்கிருந்து ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்த கணபதி ராஜ்குமார், தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
முன்னதாக, மருதமலையில் ராஜ்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, உடன் இருந்த தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு, திமுக ஐடி விங் மருதமலை பகுதி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ், ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினார். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.