மதுரை:கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி அதிகாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அழகேந்திரன் என தெரியவந்தது.
இந்த நிலையில் இளைஞரின் பெற்றோர்கள் மாரிமுத்து-மாரியம்மாள் தம்பதியினர் உயிரிழந்த அழகேந்திரனின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இவ்வழக்கில் படுகொலை செய்யப்பட்ட அழகேந்திரன் அதே கிராமத்தைச் சேர்ந்த (மாற்று சாதியை சேர்ந்த) ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் 19 வயது மகளை காதலித்துள்ளார்.
அந்த பெண்ணின் தாய்மாமன் பிரபாகரன் கடந்த திங்கட்கிழமை இரவு, டி.கல்லுப்பட்டியில் உறவினர் வீட்டிலிருந்த அழகேந்திரனை தொடர்ச்சியாக செல்போனில் அழைத்து பேசி வீட்டை விட்டு வெளியே வரவழைத்து இருசக்கர வாகனத்தில் கள்ளிக்குடி பகுதிக்கு அழைத்துச் சென்று ஆணவக்கொலை செய்ததாக வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் அழகேந்திரனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
ஆணவக் கொலை என புகார் அளித்த பெற்றோர்கள் தொடர்ச்சியாக இன்றும் மூன்றாவது நாளாக ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரபாகரன் மற்றும் பெண்ணின் தந்தை ஆகிய இருவர் மீதும் சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், முதற்கட்டமாக பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கொலைக்கு உதவிய 4 பேர் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தையை போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில்,பிரபாகரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்கண்ணன், பிரகாஷ் குமார் மற்றும் டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த 2 சிறார்கள் உள்பட 4 பேர் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த நபர்கள் என்பதால் இவ்வழக்கானது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டு தற்போது இவ்வழக்கில் பிரபாகரன், முத்து கண்ணன், பிரகாஷ் குமார், ஒரு சிறார் உட்பட 4 பேரை கைது செய்து உள்ளனர்.
மேலும், தலைமறைவாக உள்ள பெண்ணின் தந்தை மற்றும் ஒரு சிறாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 3 நாட்களாக உடலை வாங்க மறுத்து அழகேந்திரன் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது உறவினர்களுடன் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றப்பட்டு 4 பேரை கைது செய்த நிலையில் உடலை பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அழகேந்திரன் உடலை வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க: 21 வயது இளைஞர் தலை துண்டித்து கொலை.. ஆணவ படுகொலை என உறவினர்கள் போராட்டம்.. மதுரை சம்பவத்தின் பின்னணி என்ன? - HONOR KILLING IN MADURAI