சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகத் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (பிப்.21) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாகக் கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாகத் தெரிவிக்கின்றனர் என வாதிட்டார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக 30 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், போராட்டங்கள் நடத்தியதற்காக, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராகக் கோஷமிட்டது, கரோனா விதிகளை மீறியதாக அரசியல் காரணமாகத் தொடரப்பட்ட வழக்குகள் அவை என்றார்.
மேலும் இந்த 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகள் தவிர, மீதமுள்ள ஆறு வழக்குகள், போஸ்டர் ஒட்டியது, அப்போதைய முதலமைச்சருக்கு எதிராக கோஷம் எழுப்பியது தொடர்பான வழக்குகள் தான் என்பதால், 30 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை முன் வைத்த வாதம் தவறு எனத் தெரிவித்தார்.
மேலும், கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்குக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்கத் துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை, புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்கத்துறையினரே கூறுகின்றனர் என்றும் வாதிட்டார்.