முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி கன்னியாகுமரி: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பாஜக தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை (15.03.2024) தமிழ்நாடு வருகைத் தருகிறார்.
கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி சிறப்புரையாற்றுகிறார். அந்த பொதுக்கூட்டத்தில், தென் மாவட்ட பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரதமர் வருகையை முன்னிட்டு, குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்காக டெல்லியிலிருந்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, நெல்லை மாவட்ட போலீஸ் டிஐஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி பேசவுள்ள நிகழ்ச்சிக்கான பந்தல் கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொதுக்கூட்ட இடத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி பேச உள்ள மேடை தெற்கிலிருந்து வடக்கு பார்த்து அமைக்கப்படுகிறது.
மேலும் தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாகப் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்ற இடமும், ஜேசிபி இயந்திரம் மூலமாகச் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமரும் வகையில் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளதும், சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், "நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்காகப் பிரதமர் மோடி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக, நாளை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார்.
பிரதமர் வருகையின் காரணமாகக் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி உறுதி படுத்தப்படும் வகையில் அமைந்துள்ளது. மேலும், 18ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், 19ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைந்ததை வரவேற்கிறேன். பிரதமர் மோடி ஆளுமையை ஏற்று வரும் அனைத்து கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி, 3வது முறையாகப் பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் திமுகவை மிஞ்சும் அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. அயல்நாட்டுத் தொடர்பு முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு வளர்ச்சிகளைச் செய்து உள்ளது. கோடிக்கணக்கான திட்டங்களை நாட்டுக்குப் பிரதமர் மோடி அர்ப்பணித்து உள்ளார். இந்த தேர்தலை பொருத்தமட்டில் 'மீண்டும் மோடி வேண்டும் மோடி' என்ற கொள்கை அடிப்படையில் தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் - டிடிவி தினகரன் போட்டாபோட்டி? தொகுதிகளை இறுதி செய்ய முடியாமல் தவிக்கும் பாஜக?