மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய நீதியரசர் எஸ் இராஜேஸ்வரன் (Credits - ETV Bharat Tamilnadu) தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை கல்லூரி வளாக திறந்துவெளி மைதானத்தில் கல்விக்குழு தலைவர் அன்வர் கபீர் தலைமையிலும், துணைத் தலைவர் மரு.எகியாநயீம் மற்றும் குழுமத் தலைவர் அப்துல் கபூர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டு, இக்கல்லூரியில் 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் இளங்கலை, முதுகலையில் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 50 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
இதில், முதற்கட்டமாக பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 60 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களுடன் பதக்கங்களையும் வழங்கி, மாணவ மாணவியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.
அப்போது, “நேற்று வரை நீங்கள் மாணவர்கள்; இன்று முதல் பட்டதாரிகள். தற்போது சமுதாயத்தில் குழப்பமான சூழல்நிலை நிலவுகிறது. எங்கு சென்றாலும் போட்டி, கூட்டம், குறைபாடுகள் இவற்றை எல்லாம் தாண்டி நாம் முன்னேறி சாதிக்க வேண்டும் என்றால், முதலில் ஒரு லட்சியம் குறிக்கோள் வேண்டும். அதற்கு கல்வி மட்டும் போதாது. அதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக் கொண்டு நம்மை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வி அளிக்கும் முக்கிய குணாதியங்களான ஒழுக்கம், பொறுப்பு, திடநம்பிக்கை, துணிவு மற்றும் விருந்தோம்பல் மரியாதை ஆகிய இவை ஐந்தும் இருக்கும் அனைவரும் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. முனைபோடும், முழு ஈடுபாட்டுடன் உழைப்பவர்கள் அனைவராலும் சாதிக்க முடியும்” என்று தெரிவித்தார். இந்த 20வது பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற வந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பெற்றோர், குடும்பத்தினர், கல்லூரி பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'ஆசிரியர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக்கூடாது' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி - TN School Education Dept Warning