சென்னை:தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன்.மாணிக்கவேல். இவர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஐஜி ஆகவும், பிறகு ஐஜி ஆகவும், சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார். மேலும் பல்வேறு அதிரடி கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற பல்வேறு பாரம்பரிய சிலைகளை மீட்டு உள்ளார்.
சிபிஐ ரைடு:இந்த நிலையில் நேற்று காலை முதல் சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதாவது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் பணியாற்றியபோது, சிலை கடத்தல்காரர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக அதே பிரிவில் பணியாற்றி இடைநீக்கம் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதனை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சோதனையானது நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்குப் பின் பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார்.
என் மீது ஓராயிரம் வழக்குகள்:அப்போது அவர் கூறுகையில், "டெல்லியிலிருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் என்னுடைய நேர்மையைப் புகழ்ந்து விட்டுச் சென்றனர். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் என்னிடம் இருந்து சில ஆவணங்களைப் பெற்றுச் சென்றனர்.
என் மீது ஓராயிரம் வழக்குகள் இருக்கிறது. நான் இறக்கும் வரை என் மீது வழக்குகள் இருக்கும். என்னிடம் இருக்கும் ஆவணங்களைக் கொடுத்து அதிகாரிகளுக்கு உதவி இருக்கிறேன். முன்பிருந்த விசாரணை அதிகாரியிடம் ஆவணங்களைக் கொடுக்க முடியவில்லை.
தற்பொழுது இருக்கும் விசாரணை அதிகாரியிடம் என்னிடம் இருந்த ஆவணங்களைக் கொடுத்திருக்கிறேன். தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு 6 சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்கச் சென்றபோது தான் காவல் ஆய்வாளர் காதர் பாட்சாவிற்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டுபிடித்தேன்.