தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை அதிபர் இந்தியா வந்த போது பிரதமர் ஏன் கச்சத்தீவைப் பற்றி பேசவில்லை? - ஜெயகுமார் கேள்வி! - Kachchatheevu Issue

Jayakumar Kachchatheevu Twit: கடந்த ஆண்டு இலங்கை அதிபர் இந்தியா வந்த போது எரிசக்தி, விமான சேவை, இருநாட்டிற்கு இடையேயான பயண வசதிகள், UPI போன்றவற்றிற்காக ஒப்பந்தங்கள் பல போட்ட பிரதமர் ஏன் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையான கச்சத்தீவைப் பற்றிப் பேசவில்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

Jayakumar Kachchatheevu Twit
Jayakumar Kachchatheevu Twit

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 10:10 PM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு விவகாரம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஆவணங்களை நேற்று (மார்ச்.31) வெளியிட்டார்.

இதனை அடுத்து, கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தனது 'X' வலைதளப் பக்கத்தில் கச்சத்தீவு விவகாரம் குறித்து, செய்தி குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், "இருநாட்டு நல்லுறவிற்கு தமிழ்நாட்டு மீனவர்களின் உயிரையும் வாழ்வையும் அடமானம் வைத்தது அன்றைய காங்கிரஸ் அரசு. எது சொன்னாலும் சரி என்று தலையாட்டும் பொம்மையாக கச்சத்தீவு தாரைவார்க்கும்போது கப்..சிப்..என வாய்மூடி நின்றது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

தனது ஆட்சிக்காக கொஞ்சம் கூட மனசாட்சி இன்றி தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்தார். மந்திரி பதவிக்காக டெல்லியில் முகாம் இடுபவர் மக்கள் உரிமைக்கு கடிதம் மட்டுமே போட்டார். ஜெயலலித்தா எதிர்கட்சியாக எதிர்த்து நின்றார். நீதி கேட்டு நாட்டின் உயரிய இடமான உச்சநீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்தார். 'ஒரு நாள் உறுதியாக வெல்வேன்' என சட்டமன்றத்தில் கூறினார்.

அன்று காங்கிரஸ்-திமுக‌ கச்சத்தீவை தாரைவார்த்தது. இன்று பத்தாண்டு காலம் ‌மத்தியில் இருந்த பாஜக அரசிற்கு தேர்தல் வந்தவுடன் தான் கச்சத்தீவு நினைவு வந்துள்ளது. 10 ஆண்டுகளாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே கடந்த ஆண்டு இலங்கை அதிபர் இந்தியா வந்த போது எரிசக்தி, விமானசேவை, இருநாட்டிற்கு இடையேயான பயண வசதிகள், UPI போன்றவற்றிற்காக ஒப்பந்தங்கள் பல போட்ட பிரதமர்.

ஏன் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையான கச்சத்தீவை பற்றி பேசவில்லை. மீனவர்களை வைத்து அரசியல் ஆதாயம் மட்டுமே தேடி கொள்கிறார்கள். இவர்கள் கச்சத்தீவை மீட்கவும் மாட்டார்கள், மீனவர்கள் கைதை தடுக்கவும் மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பூதாகரமாகும் கச்சத்தீவு விவகாரம்! தேர்தல் யுக்தியா? மீனவர்கள் மீது அக்கறையா? வரலாறு கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details