திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இந்த வனப்பகுதிகளில் மான், காட்டெருமை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் இருந்து வருகிறது. தொடர்ந்து இந்த வன விலங்குகள், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி, நகர் பகுதிகளில் நுழைவது மட்டுமின்றி நகர் பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களிலும் உலா வருகிறது.
இந்த நிலையில், கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் தனியார் தோட்டத்தில் இருந்த சிலர் மான் ஒன்றை வேட்டையாடி அதனை சமைப்பதற்காக தயார் செய்துள்ளனர். மேலும், அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இந்த புகைப்படம் வைரலான நிலையில், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி மற்றும் சமைத்த மான் இறைச்சி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார், ராஜேஷ் கண்ணன், அஜித், சிவராமன், ராமகிருஷ்ணன், பிரவீன் ஆகிய ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், டிராக்டர் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இவர்கள் பல்வேறு வேட்டைச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்தும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல், தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு