ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குரும்பூர், சர்க்கரைப்பள்ளம் ஆகிய காட்டாறுகளில் செந்நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். காட்டாறு வெள்ளம் காரணமாக, இரு பள்ளங்களை கடந்து செல்லும் அரசுப் பேருந்து பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சர்க்கரைப்பள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் கிராம மக்கள் உதவியோடு இருசக்கர வாகனத்தை மேலே ஏற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். சர்க்கரைப்பள்ளத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அறிந்தும் மக்கள் கடந்து செல்வது ஆபத்தானது என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.