சென்னை:சென்னை விமான நிலையத்தில் இன்று இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 14 விமானங்கள் தாமதமார புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கர்நாடக மாநிலம் சிவமுகாவிலிருந்து மதியம் 1.05 மணிக்கு சென்னைக்கு வரும் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம், இன்று ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது. இ
இதைபோல் சென்னையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு சிவமுகா செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானமும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த 2 விமானங்களும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் சென்னையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, ஹாங்காங், பாங்காக், மஸ்கட், டெல்லி, மும்பை, கோவா, அலகாபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்கான 10 விமானங்கள் இன்று தாமதமாக இயக்கப்பட்டன.
இதேபோன்று பாங்காக், சிங்கப்பூர், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வருகை தரவேண்டிய நான்கு விமானங்களும் தாமதமாக சென்னை வந்தடைந்தன. மொத்தம் இந்த 14 விமானங்களும் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.
விமானங்கள் திடீரென ரத்து மற்றும் தாமதம் குறித்து பயணிகளுக்கு முன்னதாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நிர்வாக காரணங்கள் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்ததாக பயணிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். குறிப்பாக ஒரு விமானத்தில் வந்து, அதிலிருந்து மாறி மற்றொரு விமானத்தில் பயணிக்க வேண்டிய டிரான்சிட் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.