கோயம்புத்தூர்:கோவை மாவட்டம், சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் மேற்குத்தொடர்ச்சிமலைத் தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி மலையடிவாரமாக இருப்பதால், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் மற்றும் வன உயிரினங்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சோமையம்பாளையம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள திறந்தவெளியில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த குப்பைக் கிடங்கில் இன்று (ஏப்.9) மதியம் தீ விபத்து ஏற்பட்டு, குப்பைக் கிடங்கு முழுவதும் தீ மளமளவென பரவியது.
இது குறித்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தீ வனப்பகுதிக்கு பரவாமல் இருக்கும் வகையில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.