கோயம்புத்தூர்: கோவையில் ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் நேற்று முன் தினம் புதன்கிழமை அன்று பிரியாணி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. ஆறு பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசும், ஐந்து பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் பரிசு, மூன்று பிரியாணி சாப்பிட்டால் 25 ஆயிரம் பரிசும், என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
கோவை ஆட்சியர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கோவை மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கோவை மாநகரின் முக்கிய பகுதியான அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், போன்றவை இணைக்க கூடிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அன்றைய தினமே போக்குவரத்து போலீசார் அனுமதியின்றி நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில், எவ்வித முன் அனுமதியுமின்றி பொது இடத்தில் பொது மக்களை கூட்டி போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பந்தைய சாலை காவல் நிலையம் ஆய்வாளர் அர்ஜுன் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல் பராமரிப்பு குறித்தான மாவட்ட அளவிலான ஒரு நாள் முகாம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவையில் உணவு நிகழ்ச்சிகளில் உணவின் தரம் போன்றவை குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் கண்காணித்து வருவதாகவும், உணவின் தரம் முறையாக கடைபிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பொது இடங்களில் அனுமதியின்றி உணவு போட்டிகள் நடைபெற்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:கடன் வாங்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம்.. தூத்துக்குடி மன்மதன் சிக்கியது எப்படி?