கோயம்புத்தூர்:2025 -26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். அந்த மத்திய பட்ஜெட்டில் ஜவுளி துறைக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்பு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவிக்க வேண்டும் என இந்திய ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பு சார்பில் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “மத்திய பட்ஜெட்டின் எதிர்பார்ப்பு கடந்த முறையை விட இந்த தடவை அதிகமாக உள்ளது. காரணம் உற்பத்தி துறையை பொருத்த வரை இந்த முறை அதிக அளவு தொழில் வளர்ச்சி அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அமெரிக்கா அதிபராக பொறுப்பு ஏற்றுள்ள ட்ரம்ப், சீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் போது, இந்தியாவிற்கு நல்ல சாதகமான சூழல் ஏற்படும்.
ஏற்றுமதியும் வளர்ச்சியும்:சீனா 13 பில்லியன் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. நாம் 1.3 மற்றும் 1.4 டாலர் பில்லியன் அளவு ஏற்றுமதி செய்கிறோம். நமக்கு 10 சதவீதம் வாய்ப்பு வரும் போது சந்தையை நாம் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த பட்ஜெட்டில் இரண்டு முக்கியமான விஷயங்கள் தேவைப்படுகின்றன. பிஎல்ஐ 2 என்கிற சிறு நடுத்தர நிறுவனங்கள் பங்கு பெறக் கூடிய சிறப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அதிகளவிலான முதலீடுகளை பெற்று ஏற்றுமதி அதிகரிக்கும். அப்போது, உலக நாடுகளுடன் இந்தியா போட்டி போடக்கூடிய அளவிற்கு உயரும்.
இறக்குமதி வரி நீக்கப்பட வேண்டும்:மூலப் பொருட்களின் விலை மற்ற நாடுகளில் என்ன விலைக்கு கிடைக்கிறதோ, அதை விலைக்கு இங்கும் கிடைக்க வேண்டும். அதே போல் செயற்கையாக உருவாக்கப்பட்ட இறக்குமதி வரி நீக்கப்படும் பட்சத்தில் உலக நாடுகளுடன் போட்டி நிலவும் சூழலில் விவசாயிகள் மற்றும் தொழில் துறைக்கு நல்ல வாய்ப்புகளும், வருமானமும் கிடைக்கும்.
இந்தியாவில் 300 முதல் 330 லட்சம் பேல் வரை பருத்தி விளையும்பட்சத்தில் 90% நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் ஏற்றுமதி மிகவும் குறைவான அளவில் உள்ளது. இந்த துறையில் பருத்தியுடன், பாலிஸ்டர் கலப்பதால் அவற்றிற்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தேவைகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பருத்தி உற்பத்தி ஹெக்டேருக்கு 400 கிலோ வரை மட்டுமே கிடைக்கிறது. மற்ற நாடுகளில் 1000 கிலோவை தொட்டு விட்டது. இதை 30% அதிகப்படுத்தும் போது 4.5 கோடி பேல் வரும்போது துறை வளர்ச்சி பெரும் அது நீண்ட கால நோக்காக இருக்கும். பருத்திக்கான இறக்குமதி வரி 11% நீக்க வேண்டும்" என்றார்.