தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலாற்றில் மீண்டும் மீண்டும் கலக்கும் கழிவுநீர்.. "வஞ்சிக்கப்படும் 3 லட்சம் குடும்பங்கள்" - விவசாயிகள் வேதனை! - PALAR RIVER ISSUE

பாலாற்றில் திறந்துவிடப்படும் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சுமார் 7 அடிக்கு பனிமலை போல் பொங்கி நுரையால் ஓடுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலாற்றில் பனிமலை போல் பொங்கி நிற்கும் நுரை
பாலாற்றில் பொங்கி நிற்கும் கழிவுநீர் நுரை (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 7 hours ago

திருப்பத்தூர்:பாலாற்றில் திறந்துவிடப்படும் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் 7 அடிக்கு மேல் நுரையாய் பொங்கி ஓடுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வருவதாகவும், 300 முதலாளிகள் வாழ்வதற்காக 3 லட்சம் விவசாயிகளின் வாழ்க்கை அழிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தமிழக - ஆந்திர மாநில எல்லையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. அந்த வகையில் பாலாற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாலாற்றில் கலக்கும் கழிவுநீர் குறித்து விவசாயி சரவணன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை, பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக பாலாற்றில் திறந்து விட்டுள்ளதாகவும், அதனால் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றில் 7 அடிக்கு மேல் பனிமலை போல் நுரை பொங்கி காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் சென்று கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுபோல, பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பது தொடர்கதையாக வருவதாகவும், இதனால் பாலாற்றுப் படுக்கையில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேநிலை தொடர்ந்தால் பாலாறு படுக்கையில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத அபாயம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், பாலாறு படுக்கையில் உள்ள நிலத்தடி நீர் குடிக்கக் கூட முடியாத நிலையில் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், வெறும் 300 முதலாளிகள் வாழ்வதற்காக 3 லட்சம் விவசாயிகள் அழிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பனிமலை போல் பொங்கி நிற்கும் கழிவுநீர் நுரை (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:1964 டிசம்பர் 23 புயலால் அழிந்த தனுஷ்கோடி...மீண்டும் கட்டமைக்க மக்கள் கோரிக்கை!

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சரவணன் கூறுகையில், "பாலாற்றில் கடந்த 40 ஆண்டுகளாக தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போதும், திருப்பத்தூர் மாவட்டமாகப் பிரிந்த பிறகும் பலமுறை விவசாய சங்க குறைதீர் கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். ஆனால், அரசாங்கமும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய வாணியம்பாடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால், அதில் சுத்திகரிப்பு செய்யாமல் தேக்கி வைத்து, இரவு நேரத்திலும் மழை நேரத்திலும் திறந்து விடுகின்றனர். இந்நிலையில் இப்படியே தொடர்ந்தால், விவசாயிகள் இங்கு வாழ்வதற்கே அருகதையற்ற சூழல் உருவாகும். அதனால், இந்த பிரச்சனைக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வு காண வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details