தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகரில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 44 குளங்களை மீட்டெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகம் என எந்த அரசுத் துறையும் கண்டுகொள்ளவில்லை எனக்கூறி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் இன்று தேசியக் கொடிகளுடன் திரண்டு வந்து, நீர் இன்றி வறண்டு கிடக்கும் ஆயி குளத்தை நிரப்பிட வேண்டி, குடத்தில் கொண்டு வந்த நீரை குளத்தில் கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் கூறுகையில், “கொள்ளிடம், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் என அனைத்து ஆறுகள் மற்றும் அவற்றின் கிளை ஆறுகளில் தண்ணீர் நிரம்பி ஓடி கடலில் சேர்ந்து வரும் நிலையில், காவிரி சமவெளி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகிறது. ஆறுகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட எட்டிப் பார்க்காத அவல நிலை நீடிக்கிறது.
நீர் ஆதாரங்களுக்கு தண்ணீர் வரும் வழித்தடங்களில் இருக்கின்ற அரசு மற்றும் தனியார் பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளையும், கும்பகோணம் மாநகர எல்லைக்குட்பட்ட சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, ஆயிகுளம், குயவர் குளம், மல்லாங்குளம், மேலக்காவேரி பள்ளிவாசல், தெற்கு குளம், வடக்கு குளம், எள்ளு குட்டை குளம், தாமரைக் குளம், தைக்கால் குளம், சாராக்குளம், பாபு செட்டிகுளம், குப்பான் குளம், செக்காங்கண்ணி குளம் உள்ளிட்ட 44 குளங்கள் மற்றும் அவற்றிற்கு தண்ணீர் உள் வரும் மற்றும் தண்ணீர் வெளியேறும் நீர்வழிப் பாதைகளில் உள்ள அனைத்துவித ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றிட சென்னை உயர் நீதிமன்றம் 2018ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. அதனை இதுவரை அரசு செயல்படுத்தவில்லை.