மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தாங்கள் மேற்கொண்ட போராட்டத்துக்கு முடிவு தெரியாமல் தில்லியில் இருந்து ஊர் திரும்பக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம் என்று இன்று மதுபை திரும்பிய விவசாயிகள் உணர்ச்சி பெருக்குடன் கூறினர்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏல அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவரும் திரண்டு கடந்த 60 நாட்களுக்கு மேலாக பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வந்தனர்.
ராம.சீனிவாசன், விவசாயிகள் பேட்டி (ETV Bharat Tamilnadu) இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 7 ஆம் தேதி மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி பெருமாள் மலையிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மதுரை தல்லாகுளம் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தமிழக பாஜக சார்பாக, மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அ. வல்லாளப்பட்டி சேர்ந்த மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், அரிட்டாபட்டியைச் சேர்ந்த முருகேசன், கிடாரிப்பட்டியைச் சேர்ந்த முத்துவீரனன் அம்பலம், தெற்கு தெருவை சேர்ந்த சாமிக்கண்ணு, நரசிங்கம்பட்டியை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் அடங்கிய குழுவினரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் மகா சுசீந்திரன், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், ராஜசிம்மன், பாலமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புது தில்லி அழைத்துச் சென்றனர்.
அங்கு மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியின் அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதனை மேலூர் பகுதி மக்கள் வரவேற்று பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், டெல்லி சென்றிருந்த விவசாயிகள் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு அரிட்டாபட்டி கிராம மக்கள் சார்பாக மாலை அணிவித்து பட்டம் சூட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், "டங்ஸ்டன் பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. மத்திய அமைச்சர் மூலமாக டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கொடுத்த ஏல அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த மாநிலங்களில் கனிம வளங்கள் உள்ளன என்று நாடு முழுவதும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. டங்ஸ்டன் அரியவகை தாது பொருள். அதை தற்போது வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருப்பதால்தான் தமிழக அரசிடம் பேசி ஏலம் விடத் தயாரானபோது மாநில அரசு எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. விவசாயிகளுடன் கலந்தாலோசித்தபோதுதான் இங்கிருக்கும் பாதிப்புகள் எங்களுக்கு தெரியவந்தன.
மக்கள் தெரிவித்த கருத்துக்களை அமைச்சர் ஏற்றுக் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இருக்கும் என தெரிவித்ததுடன் இதற்காக பிரதமர் மோடியிடம் பேசி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்துள்ளார்." என்று ராம.சீனிவாசன் கூறினார்.
'தமிழக அரசின் நடவடிக்கையால்தான் மோடி அரசு பணிந்து திட்டத்தை ரத்து செய்துள்ளது' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "இந்த விவகாரத்தை நான் அரசியலாகப் பார்க்கவில்லை. இதற்காக அனைத்து கட்சியினருமே போராடி உள்ளனர். ஆகையால் இந்த விஷயத்தை அரசியலாக இப்போது பேச விரும்பவில்லை. இதற்கு தனியாக பதில் கூறுகிறேன்.' என்றார் ராம.சீனிவாசன்.
தொடர்ந்து பேசிய விவசாயிகள், "மேலூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் கவலையோடு இருந்தனர். மிகப்பெரிய சவாலாக இருந்தது. மதுரை நோக்கி மிகப்பெரிய நடைபயணம் மேற்கொண்டு இருந்தோம். இந்தப் போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய வெற்றி பரிசாக கிடைத்திருக்கிறது.
எங்கள் கிராமத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்தபோது டங்ஸ்டன் திட்டம் வராது என உறுதி அளித்தார். டெல்லி சென்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரிடமும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம்.
இதனைக் கேட்ட அமைச்சர் பிரதமரிடம் பேசிவிட்டு செல்வதாக கூறினார். நாங்கள் முடிவு தெரியாமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்றோம். அதை ஏற்றுக் கொண்டு அடுத்த அடுத்த நாட்கள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்ட தகவலை நேற்று தெரிவித்தனர். இத்திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் அனைவருக்கும் எங்களது கிராமங்களைச் சேர்ந்த மக்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்." என்று விவசாயிகள் உணர்ச்சிப் பொங்க கூறினர்.