திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உழவர் சந்தை உள்ளது. தமிழகத்திலேயே சிறப்பாக காய்கறிகள் விற்பனையாகும் உழவர் சந்தையில் இதுவும் ஒன்றாகும். இங்கு சுமார் 100 கடைகள் உள்ளன. பல கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் பழனி உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு தினந்தோறும் 15 முதல் 20 டன் வரை காய்கறிகள் விற்பனையாகிறது. இங்கு வரும் விவசாயிகளுக்கு அன்றாடம் கடைகள் குழுக்கள் முறையில் ஒதுக்கப்படுகிறது. உழவர் சந்தையின் வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் ஆகியோர் வெளியூரை சேர்ந்த பெண்கள் என்பதால் சரிவர வேலைக்கு வருவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் சமீப காலமாக கடைகளை அதிகாரிகள் வியாபாரிகளுக்கு ஒதுக்குவதாக புகார் எழுந்த நிலையில், இன்று அதிகாலையில் வந்த விவசாயிகள், தாமாகவே கடைகளை வைத்துக் கொண்டனர். பின்னர் வந்த விவசாயிகளுக்கு கடைகள் இல்லாமல் போனதால் அலுவலர் முரளி உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாலையில் உழவர் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இரு விவசாயிகளுக்கு ஒரு கடை என பேசப்பட்டு விரைவில் பிரச்சினை சீர் செய்யப்படும் என தெரிவித்த பின் விவசாயிகள் கலைந்து சென்றனர். இது குறித்து விவசாயி ஆனந்தன் கூறுகையில், “விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டது தான் உழவர் சந்தை. ஆனால் தற்போது விவசாயி என்ற போர்வையில் வியாபாரிகள் கடை அமைத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கடைகள் கிடைப்பதில்லை. விளைவித்த பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை.