திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மந்திரம் ( 29). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலை காரணமாக மந்திரம் நேற்று (ஜூலை 11) பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு 11 மணி அளவில் தியாகராஜ நகர் ரயில்வே பீடர் சாலையில் நடந்து வந்தபோது இவரை பின்தொடர்ந்த ஒருவர் அரிவாளோடு விரட்ட தொடங்கியுள்ளார்.
இதனால் பதறிப்போன மந்திரன் அங்கிருந்து ஓட்டம் எடுத்த நிலையில் விரட்டி சென்ற மர்ம நபர் மந்திரத்தை மகாராஜா நகர் ரயில்வே மேம்பாலம் அருகே மடக்கி பிடித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளார். இதில் அவரது வலது கை மணிக்கட்டு துண்டானதோடு, பின்னந்தலையிலும் வெட்டு விழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மந்திரம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற இடம் பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் உட்பட்டது என்பதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.