தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தனியார் கல்லூரிகளில் இலவச கல்வி': மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் இருக்கும் எதிர்பார்ப்பு! - BUDGET 2025 EXPECTATIONS

பள்ளிகளில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி இருப்பது போல், உயர் கல்வியிலும் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு செய்து தனியார் கல்லூரிகளில் இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்று கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2025
மத்திய பட்ஜெட் 2025 (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 4:49 PM IST

Updated : Jan 30, 2025, 4:57 PM IST

சென்னை: 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் எதிர்பார்ப்புகள் குறித்து கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:

பொருளாதாரத்திற்கு செய்யப்படும் மூதலீடு

இந்தியாவில் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் சதவீதம் 28.4 என்ற நிலையில் இருக்கிறது. கல்விக்கும், உயர் கல்விக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டும். கல்விக்கு செலவிடப்படும் தொகை சமூக பொருளாதாரத்திற்கு செய்யப்படும் மூதலீடாகும். சமூக பொருளாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அரசு மாறினாலும் பலன் கிடைக்கும்.

கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் பேட்டி (ETV Bharat Tamilnadu)

கல்விக்கு மட்டுமே செலவிட வேண்டும்

தற்பொழுது அரசு கல்வி நிறுவனங்களுக்கான கட்டணம் 4 முதல் 5 மடங்கு அதிகரித்து வருகிறது. கல்விக்கான கட்டணம் உயர்ந்தால் மாணவர்கள் படிப்பை விட்டு சென்று விடுவார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆரம்பித்து மாணவர்கள் 3 ஆண்டுகள் முடிக்க உள்ளனர். அவர்களுக்கு முழுமையான படிப்பை கொடுக்கிறோமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி செயல்பாட்டிற்கு வரவில்லை. நிறைய திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் செலவழிக்கப்படாமல் இருக்கிறது. செலவிடப்பாடமல் உள்ள நிதியை பொது நிதிக்கு செலவிடாமல், கல்விக்கு மட்டுமே செலவிட வேண்டும்.

கல்விக்கான நிதியை எந்த மாநிலத்திற்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்கிறோம் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் வேளாண்மை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது குறைகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நாட்டில் கல்வி சிறப்பாக இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஜிஎஸ்டி போடக்கூடாது

கல்விக்கு செலவிடப்படும் தொகை சமூக முன்னேற்றத்திற்கானதாக இருப்பதால் அதற்கு ஜிஎஸ்டி போடக்கூடாது. கல்லூரியை உருவாக்கி அதில் மாணவர்கள் படித்தால், அதன் மூலம் அந்த கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இதனை மேம்பாடாக பார்க்க வேண்டுமே தவிர அதற்கு வரி விதிக்கக்கூடாது.

நகரத்துக்குள் தேர்வு

மத்திய அரசால் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் என்ஐசி என்ற கம்ப்யூட்டர் மையம் உள்ளது. ஆனால், தேர்வுகள் நகரத்தை விட்டு வெளியில் தான் நடக்கிறது. இதனால் கிராமப்புறம் மற்றும் வசதி இல்லாத மாணவர்கள் அந்த இடத்திற்கு செல்வதே சிரமமாக இருக்கிறது. எனவே ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக கம்ப்யூட்டர் பொருத்தி, நகரத்திற்குள் தேர்வினை எழுத வைத்தால், எந்த ஊராக இருந்தாலும் பேருந்து வசதி கிடைக்கும்.

இலவசமாக தேர்வு எழுத வைக்கலாம்

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் படிப்பதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும். கல்விக்கான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் பாெதுத்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்ப கட்டணத்தை நிதி உள்ளவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். நிதி வசதி இல்லாதவர்களையும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் இலவசமாக எழுத அனுமதிக்க வேண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் முன்னிலைக்கு வந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும். நாட்டில் 30 சதவீதம் பேர் படித்து, 70 சதவீதம் பேர் படிக்காவிட்டால் நாடு முன்னேற்றப் பாதைக்கு செல்லாது.

இலவச கல்வி ஒதுக்கீடு

மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்து மாணவர்களை இந்த தளத்திற்கு வரக் கூடாது என துரத்தி அடிக்கப்படுகின்றனர். இந்தியாவில் 28.4 சதவீதம் பேர் சுந்திரம் அடைந்த 76 வருடங்களில் உயர் கல்வி படிப்பவர்களாக உள்ளனர். எனவே, பள்ளிகளில் அனைவருக்கும் கட்டாயக்கல்வி இருப்பது போல், உயர் கல்வியிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு செய்து தனியார் கல்லூரிகளில் சாதி அடிப்படையின்றி இலவசமாக படிக்க வைக்க வேண்டு்ம். உயர் கல்வியிலும் இலவச கல்வி ஒதுக்கீடு செய்து கல்வி அளிக்க வேண்டும்.

மத்திய பட்ஜெட்டின் நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான ஒதுக்கீடானது மாணவர் நலனை கருத்தில் கொண்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்'' என கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

Last Updated : Jan 30, 2025, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details