கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் கோயம்புத்தூர்:தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில், கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நேற்று (பிப்.16) மாலை முதல் இரவு வரை நடைபெற்றது.
இதில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுக கொள்கை பரப்புச் துணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா ஆகியோர் பங்கேற்று பேசினர். மேலும் இதில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "இந்த ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை. ஆகையால், எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, போராடிய பின்னர்தான் பாதி பேருக்காவது, மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை தற்போது வாங்குபவர்களுக்கு, அதை நிறுத்தி விட முடியாது. எடப்பாடி ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் உரிமை தொகை வழங்கப்படும். மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களிடம், கூட்டத்திற்கு வரவில்லை என்றால் பணத்தை நிறுத்தி விடுவோம் என்று திமுகவினர் சொல்கிறார்கள் என கேள்விபட்டேன். அது என்ன அவர்கள் வீட்டில் இருந்தா தருகிறார்கள். அது அரசாங்க பணம், உங்களுக்குச் சேர வேண்டிய பணம். நீங்கள் கட்டக் கூடிய வரிப்பணத்தை தான் உங்களுக்கே தருகின்றனர். அப்படியெல்லாம் பணத்தை நிறுத்த முடியாது, அப்படியெல்லாம் நாங்கள் விட்டு விடவும் மாட்டோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் நடந்த காவல்துறை போட்டிகளில் ஊக்க மருந்து? சங்கர் ஜிவால் கலந்து கொண்ட விழாவில் கழிப்பறையில் ஊசிகள்!