ஈரோடு: ஈ.வெ.ரா சாலையில் உள்ள குடியரசு இல்லத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரதமர் மோடி பலமுறை தமிழகம் வந்து சென்றுள்ளார். முன்னதாக, முகமது கஜினி இந்தியாவுக்குப் பலமுறை வந்து கொள்ளையடித்துச் சென்றது போல இப்போது பிரதமர் மோடி தமிழகத்திற்குப் படையெடுத்து வருகிறார்.
இதனால் பிரதமர் மோடி உட்பட எத்தனை அமைச்சர்கள் தமிழகம் வந்தாலும், பாஜக வெற்றி பெறப் போவதில்லை. பாஜக ரோடு ஷோவை மக்கள் வெறுக்கிறார்கள். காமராஜரைப் பற்றி பேசுவதற்குப் பிரதமர் மோடிக்கு துளிகூட அருகதை இல்லை. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த போது பிரதமர் மோடியின் மூத்த தலைவர்களாக இருந்தவர்கள் காமராஜரைக் கொலை முயற்சி செய்ய முயன்றனர். அந்த வழியில் வந்த பிரதமர் மோடிக்கு காமராஜர் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?
இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய வல்லரசாக வரும் என பிரதமர் மோடி சொல்கிறார். ஏன் சொல்கிறார் என்றால் பிரதமர் மோடி அதற்குள் அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியில் சொல்லப்படுகின்ற திட்டம் ஆங்கிலத்திலும் சொல்லப்படும்.
ஆனால் இவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம் படைத்த தமிழ்மொழி மீது அக்கறை இருக்கும் வகையில் காட்டிக் கொள்கிறார். தமிழகத்தில் முடிந்த அத்தியாயத்தினை பாஜக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் இந்த தேர்தலில் கதாநாயகனாக உதயநிதி இருக்கிறார். கடந்த 15 தினங்களாக நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார். வரும் காலத்தில், உதயநிதியை திமுக தொண்டர்கள் உட்பட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக இருந்த போது மேஜையின் கீழ் கைவிட்டு வேலை செய்த காரணத்தினால் அவரை வேலையை விட்டு நீக்கம் செய்துள்ளார்கள். அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி இரவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தேர்தல் அலுவலர்களை அசிங்கமாகப் பேசி உள்ளார். இந்த தேர்தலில் பிரதமர் மோடியோடு சேர்ந்து அண்ணாமலையும் காணாமல் போய்விடுவார். 52 ஆயிரம் வீடுகள் மாவட்டம் தோறும் கட்டி இருப்பதாகப் பச்சைப் பொய் சொல்கிறார்கள். பொய்யை மட்டுமே முதலீடாக வைத்துள்ள பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.