சென்னை:அப்போலோ புற்றுநோய் புரோட்டான் மையம் சார்பில், சென்னையில் ஒருங்கிணைத்த சர்கோமா புற்றுநோய் குறித்தான சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்தப் பேரணியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அப்போலோ குழும புற்றுநோயியல் மற்றும் இண்டர்நேஷனல் செயல்பாடுகள் துறையின் இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக, சர்கோமா புற்றுநோயிலிருந்து மீண்டவர்களும் இதில் பங்கேற்றனர்.
சர்கோமா புற்றுநோய்:சர்கோமா என அழைக்கப்படுவது புற்றுநோயின் ஒரு வகையாகும். இது ஒரு அரிதான மற்றும் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒரு நோயாகும். இது மிக அதிகமாக குழந்தைகளையே பாதிக்கிறது. எனவே, இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்நோயின் கடும் சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கு நம்பிக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பேரணியானது நடத்தப்பட்டது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, "மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்தின் தனிப் பண்புகளான விடாப்பிடியான ஆர்வம் மற்றும் வலுவான நம்பிக்கையை இந்நிகழ்வு பிரதிபலிக்கிறது.
புற்றுநோயை வென்று வாழ்பவர்களையும் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதன் வழியாக சமூகத்தில் நேர்மறை தன்மையையும், திறனதிகார உணர்வையும் இன்னும் பரவலாக நம்மால் உருவாக்க முடியும். இந்த உன்னதமான நோக்கத்தைக் கொண்ட இந்நிகழ்வுக்கும், முயற்சிகளுக்கும் எனது ஆதரவை வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
புற்றுநோய்க்கு எதிரான போரில் அனைவரும் கைகோர்த்து ஒருங்கிணைய வேண்டும் என்று உளமார ஊக்குவிக்கிறேன். 5 கி.மீ. சைக்ளத்தான் நடைபெற்றது. தங்களது குறிக்கோள்களையும், இலக்குகளையும் அடைவதிலிருந்து புற்றுநோய் போராளிகளை எந்தவொரு சக்தியோ அல்லது சவாலோ தடுத்துவிட முடியாது.