சேலம்: அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி அருகே வீரப்பம்பாளையத்தில் இன்று(ஏப்.3) நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "எடப்பாடி மக்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் தடையில்லா காவிரிக்குடிநீர், சாலை வசதி, மருத்துவ வசதி, கால்நடை மருத்துவமனை, ரேஷன் கடை என பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி திகழ்கிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணியின் அலைதான் வீசுகிறது. அதனால் 40 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதேபோல, விளவங்கோடு இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெறுவார்.
சூறாவளி பிரச்சாரம்: தமிழ்நாடு முழுவதும் நான் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறேன். மாநிலம் முழுவதும் எங்குப் பார்த்தாலும் 'எடப்பாடி எடப்பாடி' என்று தான் எழுதி இருக்கிறார்கள். அத்தனை பெருமையும் உங்களையேச் சேரும்.
தில்லுமுல்லு திமுக: தற்போது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு தில்லுமுல்லு செய்து வாக்குகளைப் பெற முயற்சிப்பார்கள். அதை முறியடித்து அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே எந்த அரசியல் கட்சிகளும் செய்யாத அளவுக்கு பூத் கமிட்டி ஏஜெண்டுகளை நியமித்துள்ளோம். தேர்தல் நாள் அன்று பூத் கமிட்டி ஏஜென்ட்டுகள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது. கொஞ்சம் வெளியே வந்தாலும் போதும், திமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டு விடுவார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே, மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை திமுக கிடப்பில் போட்டு விட்டது. இதை நிறைவேற்றி இருந்தால் மேட்டூர் அணை உபரிநீரை ஏரிகளில் நிரப்பி தற்போது வறட்சி காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம்.
தற்போது குடிநீர் பஞ்சம் வரப் போகிறது. விவசாயத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படப் போகிறது. விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக உள்ளனர். இதற்கெல்லாம் திமுக அரசே காரணம்.
மகளிர் உரிமைத் தொகை: அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவையில் பலமுறை அழுத்தம் கொடுத்ததால் தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கியது. ரூ.1000 உரிமை தொகை வழங்குவோம் என்று கூறிவிட்டு ஆண்டுக் கணக்கில் திமுக அரசு இழுத்தடித்து. அதைப் போராடி குடும்பத்தலைவிகளுக்குப் பெற்றுத் தந்தோம். இதற்குக் காரணமாக இருந்தது அதிமுக தான்.
இப்போது தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் செல்கிறார்கள். வீடுகளின் சுவரில் திமுக சின்னம் வரைய அனுமதிக்கவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவதாக திமுக நிர்வாகிகள் சிலர் குடும்பத் தலைவிகளை மிரட்டி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
மகளிர் உரிமை தொகையை யாராவது நிறுத்தினால் நான் சும்மா விடமாட்டேன். அப்படி யாராவது திமுகவிலிருந்து மிரட்டினால் உடனடியாக எங்களுக்குத் தகவல் தெரிவித்தால் அது சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: கடந்த தேர்தலில் கவர்ச்சிகரமான 520 வாக்குறுதிகளைச் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களை மட்டுமே நிறுத்தி உள்ளார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக எந்த திட்டத்தையும் நிறுத்தியது இல்லை.
சேலம், கோவை, கரூர் எனப் பல இடங்களில் அதிமுகவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தான் இப்போது அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். அதிமுகவிற்குத் துரோகம் செய்தவர்களுக்கு மக்கள் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். அதிலும், சேலத்தில் அதிமுகவின் வெற்றி சரித்திர வெற்றியாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:"சமைத்த உணவு" குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா? கூடாதா? - Cooked Food In Refrigerator