சென்னை:சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் இயங்கி வந்த ஷெக்மேட் (SEKHMET PUB) என்கிற மதுபானக் கூடத்தில் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அபிராமிபுரம் காவல் நிலைய போலீசார், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மதுபானக் கூடத்தின் மேலாளர் சதீஷ் என்பவரை கைது செய்த நிலையில், உரிமையாளர் அசோக்குமார் என்பவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விபத்து நடந்த மதுபானக் கூடத்தில் பணிபுரிந்து வந்த மணிப்பூரைச் சேர்ந்த குப்பிலியான் லால் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், ஏற்கனவே மதுபானக் கூடத்தில் பார்ட்டிகள் நடத்தப்பட்டபோது அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்க செய்த போது கட்டிடத்தில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், இது குறித்து உரிமையாளர் அசோக் குமார் மற்றும் மேலாளர் சதீஷ்குமாரிடம் ஏற்கனவே தெரிவித்ததாகவும், அவர்கள் அலட்சியமாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகாரில் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த சைக்கிலோன் ராஜ் குடும்பத்தினர் சார்பாகவும் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்காமல், போதிய பாதுகாப்பான கட்டுமான வசதி இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர். இரு புகார் மனுக்களையும் பெற்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொறியியல் வல்லுநர்கள் குழு ஆய்வு : மேலும், முதல் தளத்தின் மேல் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால் உறுதித்தன்மை இல்லாமல் இந்த விபத்து நடைபெற்றதா என்பது குறித்து பொறியியல் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இதில் உள்கட்டமைப்பு பணிகள் எப்போது நடைபெற்றது, ஏன் பாதிலேயே நிறுத்தப்பட்டது, உரிய அனுமதி இருக்கிறதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், விரிவான விசாரணைக்குப் பின்பு, அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 8 வருடங்களுக்கு பிறகு உருவான கர்ப்பம்.. அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் கருவிலே குழந்தை இறந்ததாக புகார்! - Rajapalayam GH