நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாரிகள், சுற்றுலா பயணிகளுடன் பழங்குடியினர்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று யானைகள் வளர்ப்பு முகாமில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. இதில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
யானைகள் முகாம் வளாகத்தில் புதுபானையில் அதிகாரிகள் அனைவரும் தனித்தனியாக தங்கள் குடும்பங்களுடன் பொங்கல் வைத்தனர். பின்பு உறியடியில் கட்டப்பட்ட மண்பானையை கண்களை கட்டியபடி அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடைத்தனர்.
அதனை தொடர்ந்து குரும்பர் பழங்குடியினர் அவர்களது பாரம்பரிய இசைக்கு நடனமாடிய பொழுது, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா, சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவிகள் ஆகியோர் அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.