சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் குழு தமிழகம் வந்தனர். கடந்த 2நாட்களாக அனைத்துக் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (பிப்.24) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும். இரண்டு நாட்களாக அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் அமலாக்கத் துறைகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தினோம். தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரச்சாரம் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு அனுமதிகள் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்பிற்கு வாக்குச்சாவடியில் சிஆர்பிஎஃப் படையைப் பாதுகாப்புக்கு வைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தெரிவித்தனர். மேலும், தேர்தலைச் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தத் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. இதை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக சி-விஜில் (c-VIGIL) செயலி மூலமாகப் புகார் அளிக்கலாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த செயலி மூலமாக 5ஆயிரத்து 800 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. புகார் மீது 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். Voter help line and Suvidha செயலிகள் மூலமாகப் பொதுமக்கள் அவர்களின் வாக்குச்சாவடி உள்ளிட்ட பல்வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.