தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கூடுதல் கேமராக்கள் நிறுவ அறிவுறுத்தல்”.. ஸ்ட்ராங் ரூம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பதில்! - Strong Room CCTV issue

Extra CCTV in Strong Room at all district: தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madras High Court File Picture
Madras High Court File Picture (Credit to Gettyimages)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 6:18 PM IST

சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன. அதேபோல, ஈரோடு, விழுப்புரம் தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் சிறிது நேரத்துக்குச் செயலிழந்தன.

இது சம்பந்தமாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் எம் எல் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், கோடை வெப்பம் காரணமாக கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாதாரணமாக உள்பகுதியில் 50 டிகிரி செல்சியஸ் வரையும், வெளியில் 100 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பத்தை தாங்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்திற்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில், கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. கூடுதல் கேமராக்களை நிறுவும்படியும், எந்த பிரச்னையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் படியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கை மனுவுக்கு இன்று பதிலளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேர்தலில் போட்டியிட்டவர்கள் எவரும் வழக்கு தொடராத நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா திடீர் கோளாறு..காரணம் என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details