தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்த வாக்காளர்களுக்கு இலவச போக்குவரத்து.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு! - FREE BUS FOR SENIOR CITIZENS

Free ticket for voters: வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பொதுப் போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சக்ஷம் செயலியை (Saksham Mobile App) பயன்படுத்தலாம் எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

election commission
தேர்தல் ஆணையம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 9:03 AM IST

Updated : Apr 19, 2024, 11:36 AM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கியது. அதேபோல் தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். தமிழகத்தில் 6 கோடியே 23 இலட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் மற்றும் புதுச்சேரியில் 10 இலட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலையொட்டி இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளான இன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும், பொதுப் போக்குவரத்து வசதி இல்லையெனில், வாக்காளர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து மாவட்டங்களிலும், இன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கும், வாக்குச்சாவடியில் இருந்து இல்லத்திற்கும் இலவசமாக சென்று வர போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய வசதிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ‘சக்‌ஷம் கைபேசி செயலி’ (Saksham Mobile App)அல்லது 1950 உதவி எண் மூலம் மாவட்டக் கட்டுப்பாட்டு அறையில் கோரிக்கை முன்வைக்கலாம்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - Lok Sabha Election 2024

Last Updated : Apr 19, 2024, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details