தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரம்" - அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

TamilNadu Election: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று, அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

TamilNadu Election
TamilNadu Election

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 8:05 PM IST

சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதாவின் காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு, ஜெயலலிதாவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு,

அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழ்நாட்டில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய அதிமுக தலைமை செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், கோடானு கோடி தொண்டர்களுக்கும், முகவர்களுக்கும், அதேபோல், கூட்டணி மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் அதிமுக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details