தஞ்சாவூர்: தஞ்சாவூர் வல்லம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (ஜன. 28) சுமார் 70 அடி உயரக் கொடிக்கம்பத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சிக் கொடியை ஏற்றினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பு பெற்றோம். தேர்தல் ஆணையத்தின் மூலம் நல்ல தீர்வைக் கண்டோம். இனி அதிமுகவை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுகவை அழிக்க நினைத்தார்கள். அழிந்து போனார்கள். இந்த இயக்கத்தைக் கெடுக்க நினைத்தார்கள். கெட்டுப் போனார்கள். திமுக கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்து கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்படவில்லை.
ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி இன்றைய முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிற பொம்மை முதலமைச்சர். 100% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பொய்யைச் சொல்லி முழு பூசனிக்காயைச் சோற்றிலே மறைக்கிறார்.
இது விஞ்ஞான உலகம் யாரையும் ஏமாற்ற முடியாது. திமுக குடும்ப கட்சி, குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் வர வேண்டும் என்ற குறிக்கோள். மக்களைப் பற்றி கவலை இல்லை. அது கட்சி அல்ல கார்ப்ரேட் கம்பெனி. இரண்டு ஆண்டுக் கால திமுக ஆட்சியில் கொள்ளையடிப்பது தான் குறிக்கோள். கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக இன்றைக்கு வெளிநாடு சென்றிருக்கிறார் முதலமைச்சர்.