சென்னை:கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சி, கோயம்புத்தூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், மணல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவு மணல் அள்ளப்பட்டு, அதன் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாயை, அரசுக்கு கணக்கு காட்டாமல் மறைத்து முறைகேடு நடத்தியதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக சோதனைகள் மேற்கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சோதனை முடிவில் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பு உள்ள சொத்துக்கள், 250 மணல் அள்ளும் இயந்திரங்கள் உள்பட 128 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். மேலும், மணல் குவாரி உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த வாரம் சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 17 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், இரண்டரை கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மணல் குவாரி ஒப்பந்ததாரரான கரிகாலன் என்பவரின் சென்னை நந்தனம் சிஐடி நகரில் உள்ள வீட்டில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.