புதுக்கோட்டை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இலுப்பூர் வீட்டில், இன்று காலை 8 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையானது 10 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து மாலை 6.30 மணிக்கு முடிவடைந்தது.
சோதனை நடைபெறுவதை ஒட்டி, விஜயபாஸ்கர் வீட்டில் அதிமுகவினர் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், சோதனையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், அவரது தந்தை சின்னத்தம்பி மற்றும் தாய் ஆகியோர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
தந்தை சின்னத்தம்பியிடம் அதிகாரிகள் சில கேள்விகளை கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு விதிமுறைகளை மீறி சான்றிதழ் வழங்கியதில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த சோதனையானது நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, இது குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு முடிவடைந்த இந்த சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அதை இரண்டு பேக்குகளில் அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை செய்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த சோதனை நிறைவடைந்த பின்னர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி பேட்டியளித்தார். அப்போது, பாஜக அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது என்றாலும், தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுள்ளதால் இதனை மறுப்பதற்கு இல்லை என்றார்.
இதையும் படிங்க:"ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் விளக்கம் அளிப்பார்” - அண்ணாமலை பேட்டி! - BJP Candidate List