தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
முன்னதாக, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு முதற்கட்ட விசாரணை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதன்படி, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் 28 கோடி ரூபாய் பணத்தை திட்ட அனுமதி வழங்குவதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம், வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார். தற்போது ஒரத்தநாடு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அவர் இருந்து வருகிறார்.