வேலூர்:வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வீட்டில் சோதனை செய்வதற்காக அமலாக்க துறையினர் இன்று காலை சுமார் 8:55 மணி அளவில் அங்கு வருகை தந்தனர். ஆனால், அங்கு அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் இருவரும் இல்லாததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டியதானது.
அதனிடையே, அமலாக்கத் துறையினர் கதிர் ஆனந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது சோதனைக்கு எம்.பி. கதிர் ஆனந்த் ஒப்புகொண்ட நிலையில், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில், கட்சி நிர்வாகி வன்னிய ராஜா, வழக்கறிஞர் பாலாஜி ஆகிய மூவரிடம் அமலாக்கத் துறையினர் அத்தாட்சி கையெழுத்தை பெற்று பிற்பகல் 2:45 மணியளவில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சோதனையை தொடங்கினர். சோதனையின்போது எம்.பி. கதிர் ஆனந்தின் வழக்கறிஞர் பாலாஜியையும் அமலாக்கத் துறையினர் உடன் அழைத்துச் சென்றனர்.
சுத்தி, உளி, கடப்பாரை:இந்நிலையில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், சோதனைக்கு இடையே அவர்கள் சுத்தியல், உளி, பெரிய கடப்பாரை ஆகியவற்றை உள்ளே கொண்டு சென்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.