சென்னை:தமிழகத்தில் நடைபெற்ற நிதி நிறுவன மோசடி வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என திருவண்ணாமலை வந்தவாசியைச் சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “அதிக வட்டி தருவதாகக் கூறி ஹிஜாவு நிதி நிறுவனம், ஆருத்ரா கோல்டு, எல்என்எஸ் நிதி நிறுவனம், சாய் எண்டர்பிரைஸ், ஆம்ரோ அசோசியேஷன் உள்ளிட்ட 7 நிதி நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து அதன் உரிமையாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
மக்களை ஏமாற்றி ஹிஜாவு நிறுவனம் ரூ.1,500 கோடி மோசடியும், எல்என்எஸ் நிறுவனம் ரூ.6 ஆயிரம் கோடியும், ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.8 ஆயிரம் கோடியும், சாய் எண்டர்பிரைசஸ் ரூ.350 கோடியும் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கொண்டு சென்றுள்ளனர். இந்த மோசடிகள் அனைத்தும் சென்னை உள்ளிட்ட தமிழக வங்கிகள் மூலமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலர் பணம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை தற்போது மாநிலப் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆனால், மோசடி செய்த பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதால் இதில் ஹவாலா, கருப்பு பணம் விவகாரமும் உள்ளதால் நிதி நிறுவன மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “நிதி நிறுவன மோசடி தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024 வரை மொத்தமாக 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.141.29 கோடி மீட்கப்பட்டுள்ளது.
மேலும், மோசடி தொடர்பாக 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 59 பேர் தலைமறைவாகி உள்ளனர். மோசடியில் ஈடுபட்ட 1,524 வங்கி கணக்கில் இருந்த ரூ.180.70 கோடி முடக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ. 1,118.46 கோடி மதிப்பிலான 3,264 அசையும், அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 659 வழக்குகளில் ரூ.676.6 கோடி உரியவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற நிதி நிறுவன உரிமையாளர்கள், இயக்குனர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு தேடப்பட்டு வருகிறது. நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதிமன்றத்தில் தெரிவித்து வருவதால், சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” இவ்வாறு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் யாரும் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:நீட் தேர்வு விவகாரம்: தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - NEET UG EXAM ISSUE