கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலங்களில் போக்குவரத்துத் துறை அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத பல கோடி ரூபாய் பறிமுதல் செய்து உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பதிவுத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக 32 வயதான அப்ரோஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு வருபவர்களிடம் சிறு பணிகள் செய்வதாக இருந்தாலும் லஞ்சம் கேட்பதாகவும், வேறு ஆட்களை வைத்து பணம் வசூல் செய்வதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார், நேற்று இரவு திடீரென பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அந்த நேரம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு புறப்படத் தயாராக இருந்த பத்திரப் பதிவு அலுவலகத்தில் பொறுப்பில் இருக்கும் சார்பதிவாளர் அப்ரோசை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர்.