மதுரை: மதிமுக நாடாளுமன்றத் தேர்தல் நிதி அளிப்புக் கூட்டம், மதுரையில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நேற்று (பிப்.20) நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மதிமுக நிர்வாகிகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதிகளை வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, "தமிழக பட்ஜெட் ஒரு சிறந்த பட்ஜெட்டாக விளங்குகிறது. ஜி.எஸ்.டி வரியால் தமிழகத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நிதிகளை அளிக்கவில்லை. சமூக நீதி, சமத்துவத்தை மையப்படுத்தி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை இருந்தாலும் கூட, சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக-வுடன் முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக தரும் என எதிர்பார்க்கிறோம். 2 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை சீட்டுகள் கேட்டு இருக்கிறோம். திமுக அளிக்கும் தொகுதிகளின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்ட அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. மோடி பிரதமர் ஆனால், விலைவாசி குறைக்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால் அதன்படி விலைவாசியைக் குறைக்கவில்லை.