திமுக என்ன பொட்டு பூச்சியா நசுக்கிவிட..திமுக என்பது பாசனத்தில் பூத்த பூ வேலூர்:வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூரில், வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்றது. இதில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை அறிமுகம் செய்து வைத்தனர்.
இதில் பேசிய வேட்பாளர் கதிர் ஆனந்த், “5 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்தலில் மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த போது, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி. இருவரும் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்ட போது, என்னை மகத்தான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைத்தவர்கள் ஆம்பூர் மக்கள்.
என்னுடைய முதல் வெற்றியை ஆம்பூர், வாணியம்பாடி மக்கள் கொடுத்தீர்கள், உயிருள்ள வரை மறக்க மாட்டேன். இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று மோடி குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தும்போது, நாடாளுமன்றத்தில் நள்ளிரவிலும் அதை எதிர்த்தவர்களில் நானும் ஒருவன்” என பேசினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “வரும் தேர்தல் சமூக நீதிக்கும், மனு நீதிக்கும், ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். பாசிச ஆட்சி வந்தால் அரசியல் சட்டம் இருக்காது, அரசியல் சட்டம் இல்லையென்றால், நாம் வாழ முடியாது. விலைவாசி விஷம் போல் ஏறுகிறது, ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசு அச்சுற்றுத்தி கொண்டிருக்கிறார்கள்.
சிஏஏ சட்டத்தை நிறைவேற்றக் காரணம் எடப்பாடி வகையறா தான், அவர்கள் தற்போது எந்த மதத்தை வைத்து ஓட்டு கேட்பார்கள்? இன்னொருவர் இருக்கிறார், ஏ.சி.சண்முகம், ஏற்கனவே வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் தான் ஏ.சி.சண்முகம். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவர் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுது அதை செய்கிறேன் என்று அல்வா கொடுக்கிறார்கள், அல்வா கொடுப்பதில் அவர் கெட்டிகாரர்” என விமரிசித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “கட்சிக்கு உழைப்பவர்களை நான் கண்கண்ட தெய்வமாக கருதுகிறேன். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக அல்ல, ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தை காக்க நடைபெறும் தேர்தல். மேலும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவை சுக்குநூறாக உடைப்பேன் என கூறுகிறார். ஒரு பெருந்தலைவர் இப்படியா பேசுவது, எங்களை அழிக்காவ நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று வரவேண்டும்?
திமுக என்ன பொட்டு பூச்சியா நசுக்கிவிட, திமுக என்பது பாசனத்தில் பூத்த பூ, ஒருபோதும் அதை அழிக்க முடியாது. திமுகவை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை. திமுகவை அழிப்போம் என மோடி கூறும் போது, நாடி, நரம்பு, ரத்தம் எல்லாம் கொதிக்கிறது. உடல், பொருள், ஆவி அனைத்தும் கட்சிக்காக அளித்துள்ளோம்” என உணர்ச்சி பொங்க பேசினார்.
மேலும், இந்த வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: “மெட்ரோ ரயிலில் இருக்கும் விளம்பரங்களை நீக்குக”.. “அரசு வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துக” - ஆலோசனை கூட்டத்தில் வலுத்த கோரிக்கைகள்! - Ex Minister Jayakumar