சென்னை: பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து, சென்னை வரும் ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம், வழக்கமாக மாலை பாரிஸில் இருந்து புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு சென்னைக்கு வந்து சேரும். பின், மீண்டும் அதே விமானம் அதிகாலை 2.05 மணிக்கு, சென்னையில் இருந்து பாரிஸ் நகருக்கு புறப்பட்டுச் செல்லும்.
இந்நிலையில், இந்த விமானம் நேற்று (மார்ச் 18) 317 பயணிகளுடன் பாரிஸ் நகரில் இருந்து புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், மீண்டும் பாரிஸ் நகருக்கே சென்று தரை இறங்கியது. அதன் பின்னர், அந்த விமானம் சரி செய்யப்பட்டு, 5 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இன்று (மார்ச் 19) அதிகாலை 5.30 மணிக்கு 317 பயணிகளுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
இதற்கிடையே, சென்னையிலிருந்து இன்று அதிகாலை 2.05 மணிக்கு பாரீஸ் நகருக்குச் செல்ல இருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்ய 326 பயணிகள் காத்திருந்தனர். இந்தப் பயணிகள் அனைவரும் நேற்று இரவு 11 மணிக்கு முன்னதாகவே சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர்.