தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: டிச 1 அதிகாலை வரை தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இன்று மதியம் 12:30 மணியிலிருந்து நாளை அதிகாலை 4 மணி வரை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக விமானநிலைய அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சென்னை விமான நிலையத்தின் எக்ஸ் பதிவு, சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தின் எக்ஸ் பதிவு, சென்னை விமான நிலையம் (Credits- chennai airport X Page and ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 4:34 PM IST

சென்னை:வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் புயல் கரையை நெருங்கும் நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 90 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் எனவும், உள்பகுதிகளில் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் சென்னையில் தொடர்ந்து காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து புயலானது கரையை நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருப்பதால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் விமான நிலைய ஓடுபாதைகளில் மழைநீர் தேங்கியதன் காரணமாக, விமான பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி மதியம் 12:30 மணியிலிருந்து இன்று இரவு 9 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக சென்னை விமான நிலைய ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதையும் படிங்க :கனமழையால் வெள்ளம் சூழ்ந்த சென்னை புறநகர்ப் பகுதிகள்..இஎஸ்ஐ மருந்தகத்துக்கு செல்ல முடியாமல் நோயாளிகள் அவதி!

இந்நிலையில், தற்போது சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக சென்னை விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரிகளுடனும் மற்றும் விமான நிறுவனங்களின் மேலாளர்களுடனும் காணொளி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் புயல் சுமார் 8:30 மணி அளவில் கரையை கடக்கும் என்றும் மோசமான வானிலை 11:30 வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் AAI தலைமையுடன் கலந்தாலோசித்து, சென்னை விமான நிலையத்தில் செயல்பாடுகளை காலை 4:00 மணி வரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என பதிவில் கூறப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது அதிக வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் பயணிகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான பயணிகள் அனைவருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக விமான ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் வந்துள்ள பயணிகளை சென்னை நகரில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details