தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்.. என்ன தெரியுமா? - driving license obtained medical certificate - DRIVING LICENSE OBTAINED MEDICAL CERTIFICATE

New Driving license: 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள், பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.

ஓட்டுநர் உரிமம் புகைப்படம்
ஓட்டுநர் உரிமம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 6:09 PM IST

சென்னை:தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள், பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும்.

மாநிலத்தின் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன. இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருத்துவர்கள் செய்ய வேண்டியது என்ன? :இதனைத் தடுக்கும் விதமாகச் சாரதி மென்பொருளில் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் பதிவுச் சான்று எண்ணைப் பதிவேற்றம் செய்து, சாரதி மென்பொருளில் கேட்கப்படும் தங்களது கிளினிக், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து விவரங்களை ஒரு முறை பதிவேற்றம் செய்து கொண்டு தங்களது பெயரினை ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து தங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் பாஸ்வேர்டு சொல்லை உள்ளீடு செய்ய வேண்டும். இதனை முடித்த பின்பு அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் சாரதி மென்பொருளைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்களின் மருத்துவச் சான்றினை பதிவேற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.

மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் நுழைவினை ஒரு முறை உறுதி செய்துகொண்டால் போதுமானது. அவ்வாறு முறையாகச் சாரதி மென்பொருளில் பதிவு செய்து கொண்ட பின்னர் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றினை மருத்துவர்கள் எலக்ட்ரானிக் முறையிலேயே சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.

எனவே, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழினை மின்னணு மூலமாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும். இதன் மூலம் போலி மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழை முறைகேடாகப் பயன்படுத்தி வந்தது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும் தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை (ஜூன்.11) காலை 11 மணியளவில் மாநிலம் முழுவதிலுமுள்ள அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை இறுதி செய்யும் முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீட் தேர்வில் குளறுபடி? தனி கட் ஆஃப், கலந்தாய்வு வேண்டி தூத்துக்குடி ஆட்சியரிடம் மாணவர்கள் மனு! - NEET MNOP issue

ABOUT THE AUTHOR

...view details