சென்னை: சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் அதிகளவிலான போதைப்பொருள் காத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளின் உடமைகளை அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த அகமது இட்ரீஸ் (வயது 28) என்ற பயணியிடமிருந்து சுமார் மூன்று கிலோ (2,970 கிராம்) எடையுள்ள போதைப் பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது அந்தப் பயணி, இது போதைப் பொருள் அல்ல. உடலுக்கு சக்தியை கொடுக்கக்கூடிய, குளுக்கோஸ் வகை பவுடர் என்று வாதிட்டார். இருப்பினும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சந்தேகத்தில் அதை, பரிசோதனைக்காக ஆய்வு கூடத்துக்கு அனுப்பினர்.
அதில் இது போதைப்பொருள் என்பது தெரியவந்தது. ஆனால் அது மெத்தலட்மினா? அல்லது கொக்கையினா? என்ற குழப்பம் நிலவியது. இதனால் போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு என்ன என்பதை, மத்திய வருவாய் புலனாய்துறையினர், அறிவிக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில், பரிசோதனை கூடத்தில் இருந்து, இது மிக அதிக வீரியம் கொண்ட கொக்கைன் என்ற தகவல் வெளியானது.