சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' வரி அடங்கிய 1,000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி கொண்டாட்டம் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். பின்னர் அதற்கு ஆளுநரின் பதிலும், அதற்கு ஸ்டாலினும் பதில் அளித்தார்.
இந்நிலையில், ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிடநல் திருநாடும்' என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக, ஆளுநர் ரவிக்கு 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு’ வரி அடங்கிய 1000 அஞ்சல்களை அனுப்பி, திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ராயப்பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேற வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தினர் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக தெரிந்த ஆளுநர் விழா மேடையில் கண்டிக்காதது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி