மதுரை:வேங்கைவயல் வழக்கில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.
திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில்,"கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆனால் விசாரனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தவறிழைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
எனினும், இந்த மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வழக்கை தொடர்ந்து நடத்துவதாக இன்று மனுதாரர் கூறியிருந்தார். இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி நிர்மல்குமார், "இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மனுதாரர் மாற்றி மாற்றி பேச என்ன காரணம்?,"என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் தரப்பில்,"பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. ஆகவே உண்மையான குற்றவாளிகளை கண்டறியக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையில் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்றும் தங்களை தூக்கிலிடுங்கள் என தெரிவிக்கின்றனர் எனவே போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்,"என தெரிவிக்கப்பட்டது.