மதுரை:அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் நாய்க்கடியால் 1.33 லட்சம் பேரும் சிகிச்சைப் பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுரையில் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்தி அவற்றின் இனப்பெருக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வெறிநாய் தடுப்பூசிகளை அனைத்து நிலை அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்க வேண்டும் என ஆர்.டி.ஐ ஆர்வலர் என்.ஜி மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைக்காலங்களாக நாய்க்கடியால் தமிழகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையை சேர்ந்த இந்தியன் குரல் அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ஜி.மோகன், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக மனு அளித்துள்ளார்.
ஆர்.டி.ஐ ஆர்வலர் என்.ஜி மோகன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) இதற்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதுநிலை மருத்துவ ஆவண காப்பக அலுவலர் அளித்துள்ள தகவலில், “நாய் கடிக்கு ஆளான நபர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு 30 ஆயிரத்து 168 பேர் உள்நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில், நாய் கடித்து நேபிஸ் வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு 29 ஆயிரத்து 100 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சைப் பெற்றுள்ளனர். இவர்களில் 5 பேர் நேபிஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்"-ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு!
2022 ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 391 பேர் சிகிச்சைப் பெற்றதில், 5 பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 741 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில், 11 பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு, நவம்பர் வரை 20 ஆயிரத்து 123 பேர் சிகிச்சைப் பெற்ற நிலையில், 10 பேர் ரேபிஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மொத்தமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 523 பேர் நாய் கடி தாக்குதலுக்கு ஆளாகி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெளி நோயாளிகளாக சிகிச்சை பார்த்துள்ளனர். இதில், மொத்தம் 32 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆர்.டி.ஐ ஆர்வலர் என்.ஜி மோகன் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் நாய் கடி தாக்குதலுக்கு ஆளான நபர்களின் எண்ணிக்கை மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டுகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 32 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். ஆகையால், உடனடியாக மதுரையில் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்தி அவற்றின் இனப்பெருக்கத்தை தடை செய்ய வேண்டும். அதுபோன்று வெறிநாய் தடுப்பூசிகளை அனைத்து நிலை அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துளார்.