சென்னை:'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம், ஆனால் அந்த பாம்பை நம்மில் எத்தனை பேர் யானை, சிங்கம் போன்ற வனவிலங்குகள் போல் ரசித்து, நல்ல விதமான ஒப்பீட்டில் நியாபகம் வைத்துள்ளோம்? இந்த பாம்புகளின் விஷம் மற்றும் பாம்புகளின் சிறப்பு குணங்கள் குறித்து உலக பாம்புகள் தினமான இன்று இந்த சிறப்பு கட்டுரையில் பார்க்கலாம்.
உணவுச் சங்கிலியை பாதுகாக்கும் பாம்புகள்:இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று சார்ந்து வாழ்வது இயற்கையின் அமைப்பாக உள்ளது. இதில் உயிர்ச் சமநிலையை பேணுவதில் பாம்புகள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. அதாவது குறிப்பாக விவசாய நிலங்களில் 20 சதவீத உணவை எலிகள் சாப்பிட்டு வீணாக்குகின்றன. இந்நிலையில் பாம்புகள் இந்த எலிகளை கொன்று தின்பதால், வயல்வெளிகளில் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன.
மேலும், இந்த பாம்புகள் பல வகையான நோய்களுக்கு விஷமுறிவு மருந்துகளையும் அளிக்கின்றன. இவ்வாறு உணவு சங்கிலியின் நடுநிலை வகிக்கும் இந்த பாம்புகள் எலிகளை உண்பதும், இந்த பாம்புகளை கழுகுகள் உண்பதும் உணவுச் சங்கிலி அமைப்பின் ஒரு அங்கமாக உள்ளது.
மனிதனின் உயிரை உறிஞ்சும் பாம்புகள்:பாம்புகள் நன்மை பயப்பதாக ஒருபுறம் இருந்தாலும், பாம்புக்கடியோல் ஏற்படும் மரணங்களும் கவனிக்க வைக்கின்றன. குறிப்பாக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளில் பாம்புகள் மனிதர்களை கடித்து அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அடிக்கடி நடந்துவருகிறது. பாம்புகளில் 3,500 வகைகள் இருப்பதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதில் அனைத்து பாம்பும் மனிதனை, பாதிப்புக்குள்ளாக்குகிறதா என்றால் இல்லை. அவற்றில் 600 வகை பாம்புகள் தான் நஞ்சுத்தன்மையை கொண்டவை, அதிலும், 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதர்களை கொல்லும் அளவுக்கு அதிக விஷம் கொண்டவையாக உள்ளன.
நகர்ப்புறத்திற்கு குடிபெயரும் பாம்புகள்:இந்தியாவை பொறுத்தவரை, மனிதர்கள் வாழும் பகுதியை சார்ந்து, வாழ்கின்ற பாம்புகளில், நான்கு வகை பாம்புகள் மட்டுமே மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டது என்கிறார் வனக் கால்நடை மருத்துவர் அசோகன். இதுகுறித்து அவர் கூறுகையில், "பாம்புகள் பெரும்பாலும் மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே முயற்சி செய்யும். ஆனால் மனிதனின் அசைவை அறிந்து தற்காத்துக்கொள்ளவே அது சீறி, கடிக்க முற்படுகிறது. தற்போது கிராமப்புறங்கள் நகர்ப்புறங்களாக மாறிவரும் சூழலில் பாம்புகளுக்கு தேவையான உணவு கிராமப் பகுதிகளில் கிடைக்காததால் அவை நகர்ப்புறத்தை நோக்கி நகர்கின்றன" என்றார்.
பாம்புகள் Vs மனிதர்கள் தொடரும் மோதல்:தொடர்ந்து பேசிய மருத்துவர் அசோகன், "நகர்ப்புறத்தை நோக்கி படையெடுக்கும் பாம்புகள் பல்வேறு வகையான புதிய நோய்களால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் அசைவ பிராணியாக இருந்த பாம்புகள் தற்போது உணவுப் பற்றாக்குறையால் சைவத்திற்கு மாறி வருகின்றன. அதாவது தற்போது பாம்புகள் துணி, கண்ணாடி பாட்டில் ஆகியவற்றை சாப்பிட துவங்கியுள்ளன. அதுமட்டுமின்றி சாலை விபத்தில் சிக்கியும், பருவநிலை மாற்றத்தாலும், குறிப்பாக கோடைக் காலத்தில் பூமிக்குள் இருக்க முடியாமல் வெளியில் மனிதர்கள் இருக்கும் நிலப்பரப்புக்கு வரும் போது பாம்புகளுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் மோதல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் பாம்பு கடித்து உயிரிழக்கும் நிலையும் உருவாகியுள்ளது" என அதிர்ச்சி அளிக்கும் தகவலை கூறினார்.